இலங்கையில் 1980களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா, பிரித்தானிய விமான பைலட்களை பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதியுள்ள “கீனி மீனி: தி பிரிட்டிஷ் மெர்சினரீஸ் ஹூ காட் அவே வித் வோர் கிரைம்ஸ்” ( Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes) என்ற இந்த நூலில் இலங்கைப் போர் பற்றிய பல தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
1987ல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, நான்கு மாதங்கள் பிரிட்டிஷ் கூலி பைலட்களின் சேவையை இந்தியா இரகசியமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர் இருப்பதைப் பொதுவெளியில் இந்திய உயர் அலுவலர்கள் கண்டித்து வந்தபோதிலும், புலிகளுக்கு எதிரான தங்களுடைய தாக்குதலில் உதவுவதற்காகப் பணம் கொடுத்து இவர்களின் உதவியை இந்திய அமைதிப் படையினர் பெற்றனர் என்று அந்த நூல் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்திய அமைதிக் காப்புப் படை வருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பிரிட்டிஷ் கூலிப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் சிறப்பு விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேணல் ஜிம் ஜோன்சன் என்பவர் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.
பிரிட்டனின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜெயவர்த்தன, தீவிரவாதத்துக்கு எதிரான இவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிய வந்ததும் இலங்கைக்கு அழைத்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ இலங்கைக்கு உதவ முன்வராத நிலையில், கீனி மீனி சேவைகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான போரில் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதை பிரிட்டன் அனுமதித்துள்ளது.
கடைசி பைலட் விலக்கிக் கொள்ளப்பட்ட (1987) நவம்பர் 27 வரையிலும் இலங்கை விமானப் படை விமானங்களில் கீனி மீனி நிறுவனத்தின் “கேஎம்எஸ்” பைலட்கள் பறந்து கொண்டிருந்தார்கள் என்று கேணல் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று தந்தியொன்றில் கொழும்பிலிருந்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் டேவிட் கிளாட்ஸ்டோன் குறிப்பிட்டுள்ளதையும் மில்லர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் உள் நாட்டுப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்பான ஆவணங்களை உள்ளடக்கிய 195 கோப்புகளும், பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் (FCO) வைத்து அழிக்கப்பட்டதாக முன்னதாக தகவல் ஒன்று வெளியாகியது.
குறிப்பாக 1978-1980 காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றுக்கொண்டிருந்த போது அவர்களின் நெருக்கடியைத் தடுக்குமுகமாக பிரித்தானிய சிறப்புப் படைப் பிரிவுகளான MI5 மற்றும் விசேட விமான சேவை (SAS) ஆகியன இணைந்து ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை கூறியதாக குறித்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுளது.
அப்போது தமிழ் புலிகள் என்ற பெயரில் இயங்கிய உள்நாட்டு கிளர்ச்சிக் குழுவினை முற்றாக ஒடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் ஆவணங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவ்வாறு அழிக்கப்பட்ட இரண்டு ஆவணங்கள் 1979-1980 இலிருந்து 'இலங்கை இந்தியா உறவுகள்' என்று அழைக்கப்பட்டன," இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் ஒரு பகுதியாக காணாமல் போன கோப்புக்களை பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான பில் மில்லர் கண்டுபிடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது “கீனி மீனி: தி பிரிட்டிஷ் மெர்சினரீஸ் ஹூ காட் அவே வித் வோர் கிரைம்ஸ்” என்ற நூல் வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.