முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கிருந்தது.
இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. பொதுத் தேர்தல் தொடர்பாகவும் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அத்துடன், சந்திரிகா தலைமையிலான அணியினர் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய கூட்டத்தின்போது, அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.