என்னை தொடர்ந்து ஜனாதிபதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு அல்ல. நாட்டின் முன்னேற்றமும், கௌரவமான வாழ்க்கையினையும், சுய பொருளாதார முன்னேற்றத்தையுமே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் சம்மேளனத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தவறான வழியில் பயணிக்கும்போது மக்களாலேயே அந்த அரச தலைவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
குறிப்பாக கடந்த அரசாங்கம் மக்களின் ஆதரவுடனும், பாரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் அமைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமையினால் மக்கள் அவர்களை புறக்கணித்து என்னை தெரிவு செய்துள்ளார்கள்.
என்னை தொடர்ந்து ஜனாதிபதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு அல்ல. நாட்டின் முன்னேற்றமும், கௌரவமான வாழ்க்கையினையும், சுய பொருளாதார முன்னேற்றத்தையுமே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள், பல விடயங்கள் வெற்றிக் கொள்ள முடிந்துள்ளது. எமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்கள் முழுமையாக செயற்படுத்தப்படும்.
எனவே அவற்றினை நிறைவேற்றுவதற்கு தனது கொள்கையுடன் ஒத்துப்போகின்ற பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். பெரும்பான்மை ஆதரவுடனான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்” என்றார்.