நாட்டு மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை இன்று அறிவித்தார் ஜனாதிபதி கோட்டபாய!






குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.





இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய விசேட இலத்திரனியல் அட்டையொன்றும் வழங்கப்படும்.





சமூர்த்தி உதவி பெறுவோர், சமூர்த்தி உதவி கிடைக்கப் பெறாதவர்கள், நிலையான தொழில் இல்லாதவர்கள், பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள், தொழில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த அங்கவீனமுற்றோர், விதவை குடும்பங்கள், நிலையான வருமானம் இல்லாத முதியோர்கள் மற்றும் கடுமையான நோயாளிகள் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.





சீனி, தேயிலை, அரிசி, மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய், கருவாடு, கிழங்கு மற்றும் பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை நிவாரண விலையில் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. சதொச, கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் குறிப்பாக கிராமிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களின் ஊடாக உணவுப் பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெரிவுசெய்யப்படும் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமிய விற்பனை நிலையங்களுக்கு நிவாரண அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்படவுள்ளன.





குறித்த விற்பனை நிலையங்களை மக்கள் செறிந்து வாழும் பிரதேங்கள், குறைந்த வருமானம் பெறும் வீட்டுத் தொகுதிகள், கிராமிய பகுதிகள் மற்றும் பெருந்தோட்டத் துறையை உள்ளடக்கும் வகையிலும் அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனுமதியளிக்கப்பட்ட வியாபார நிலையங்களை தெரிவுசெய்யும் போது பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.





இதன் மூலம் சிறியளவிலான வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்துள்ளார். சுதேச உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொதிசெய்யப்பட்ட உணவு, வாசனை திரவியங்கள், இறைச்சி, மீன் முட்டை மற்றும் ஏனைய வீட்டுத் தேவைகளை குறித்த வியாபாரிகளுக்கு தரகர்கள் இன்றி நேரடியாகவே வழங்குவதற்கும் இத்திட்டத்தில் வசதிசெய்யப்பட்டுள்ளது.





இந்நிகழ்ச்சித்திதிட்டத்துடன் இணைந்ததாக கிராமிய தோட்ட மற்றும் நகர பிரதேசங்களில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கவும், ஒரு லட்சம் கி.மீ கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.







வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் என இனங்காணப்படுவோருக்கு காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் பிம் சவியவுடன் இணைந்து விவசாயம், வியாபார அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்டத்திற்காக முப்பது வருட குத்தகை அடிப்படையில் ஒரு லட்சம் காணித் துண்டுகளை வழங்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.


Powered by Blogger.