மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் அரசியல் முகவரி தேடும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் எமது கட்டுரைக்கான பதிலை கலாநிதி.சு.சிவரெத்தினம் அவர்கள் அனுப்பியுள்ளார்
கலாநிதி.சு.சிவரெத்தினம் அவர்கள் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டு சனநாயகப் பணிக்குழுவின் பிரதான இணைப்பாளராவார்.
‘மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் அரசியல் முகவரி தேடும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் தலைப்பில் Batti TV எனும் முகநூலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் 05.01.2020 அன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்புத் தொடர்பாகவும் கீழ்வருமாறு விமர்ச்சிக்கப்பட்டிருந்தது.
“கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கீழ் அனைத்து கட்சிகளும் ஒன்றியைவேண்டுமாம். இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன அரசியல் பலம் உண்டு. இவர்களின் கீழ் ஒன்றிணைய இவர்களுக்கு என்ன அரசியல் பலம் உண்டு.
கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுமே பலமான மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள்.
தங்களை வளர்த்தெடுக்க மேற்கொள்ளும் தந்திரங்களே இவைகள். வாக்கு வங்கியைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிலோ பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலோ ஒன்றிணையவோ அல்லது பொதுவான ஒரு பெயரிலோ ஒன்றுபட ஏன் இவர்களால் அழைப்பு விட முடியாமல் உள்ளது. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் போட்டியிடவேண்டும் எனும் நிபந்தனை ஏன்?
இக் கட்சிகள் ஏனைய கட்சிகளை அழைப்பதில் தவறில்லை ஆனால் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைவதற்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிற்கு என்ன வாக்கு வங்கி இருக்கின்றது.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணையாமல் தனித்து அல்லது ஒருசிலருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஏன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைய முடியாது என்பதற்கான காரணத்தை சமூகப் பொறுப்புடன் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையாக வெளிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக கிழக்கிலே உருவாகி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று குறித்த வாக்கு வங்கியை வைத்துள்ள பிள்ளையானின் கட்சி இல்லாமல் ஆக்கப்படும்.
என்று ஒரு தீர்மானம் எடுத்துள்ளனர். இவர்களுடன் ஏன் ஏனைய கட்சிகள் இணையவேண்டும் இவர்கள் யார்? இவர்களுக்கு அங்கிகாரம் கொடுத்தது யார்?
இவர்கள் இதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்களா? இவர்களின் எதிர்கால திட்டம் என்ன?
அனைத்துக்கும் அப்பால் இக் கூட்டமைப்பில் இணையும் கட்சிகளின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகும் என்பதுடன் அக் கட்சி மக்கள் மனங்களிலிருந்து இல்லாமல் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.
மேற்படி விமர்சனத்தை முன்வைத்தவருக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தோற்றம் பெற்றதன் வரலாறோ அல்லது அதன் நோக்கமோ விளங்காது தனது கட்சி விசுவாசத்தின் காரணமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். விசுவாசமும் அதன் காரணமான உணர்ச்சி அரசியலும்தான் கிழக்குத் தமிழர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை முதலில் கூறிக் கொண்டு மேற்படி விமர்சகரின் விமர்சனத்துக்கு வருகின்றேன்.
ஒட்டுமொத்த்த்தில் இத் தமிழர் கூட்டமைப்பானது மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் அரசியல் முகவரி தேடும் ஒரு அமைப்பாகும். பல உதிரிக் கட்சிகள் அரசியல் இலாபம் தேடவும், செல்வாக்குள்ள கட்சிகளை வைத்து அரசியல் அடித்தளத்தினை இடவும் எத்தணிக்கும் ஒரு கூட்டத்தின் சதி வலைகளில் சிக்காது கிழக்கை பாதுகாப்பதே சிறந்த்து.”
முதலில் நாங்கள் யார்? என்பது.
கூட்டமைப்பின் கடந்தகால அரசியல் செயற்பாடு காரணமாக கிழக்குத் தமிழ் மக்களின் இருப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் இதனை முடிவுக்குக் கொண்டு வந்து சரியான அரசியல் பாதையை வகுப்பதற்காக 23.08.2018 அன்று களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் கலந்துரையாடுவதற்கான ஒரு கூட்டத்தினை நடாத்தியிருந்தோம். அக் கூட்டத்துக்கு விமர்சகரால் குறிப்பிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற அனைத்துக் கட்சிகளும் சமுகமளித்திருந்தன. அக் கூட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் இதற்கு சாதகமான பதிலையே வழங்கியிருந்தார்கள். ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அதற்கான ஒரு பொதுச்சின்னத்தை எடுக்க வேண்டும். நாம் இந்தப் பணியை முன்னெடுத்த போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நூறு வீதம் ஆதரவு தருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு கையொப்பம் இடுவதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டபோது கடைசிவரைக்கும் கையொப்பம் இடாது தவிர்த்து காலத்தை இழுத்தடித்துக் கொண்டு வந்தார்கள். அமையவிருக்கும் கூட்டமைப்பில் அவர்களுக்கு என்ன பதவி வேண்டுமாக இருந்தாலும் எடுத்துக் கொண்டு முன் செல்ல்லாம் என்றும் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் தமது கட்சி நலனை முக்கியப்படுத்தினார்களே தவிர கிழக்கு மக்கள் நலனை முன்னிறுத்தி இவ்வாறான ஒரு பொது முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில்த்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு கட்சிகளையும் கொண்டு நாம் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் கூட்டமைப்பினை தோற்றுவித்துள்ளோம்.
எனவே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் கட்சியானது யாருடைய வீட்டுச் சொத்துமல்ல அதன் எந்தப் பதவி வேண்டுமென்றாலும் விமர்சகரால் குறிப்பிடப்பட்ட கட்சிகள் எடுத்துக்கொண்டு கிழக்குத் தமிழர் அரசியலை முன்னெடுக்கலாம். ஆனால் தங்களுடைய சின்னத்தில்தான் மற்றக் கட்சிகள் போட்டி போட வேண்டும் என்று எந்த ஒரு கட்சியும் மற்றக் கட்சிகளைக் கேட்பது பொது உடன்பாடு அல்ல என்பதை அரசியல் அறிவுடையவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் கிழக்கில் ஒரு கூட்டமைப்பாக இணைந்து ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு வருடங்களாக முயற்சிக்கின்றோமே தவிர எங்களது அரசியல் முகவரிக்கல்ல என்பதை விமர்சகர் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இந்தப் பணியில் இருக்கின்ற நாங்கள் எவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதுமில்லை என்பதையும் தெரிவித்திருக்கின்றோம்.
விமர்சகரால் குறிப்பிடப்பட்ட வாக்கு வங்கி உள்ள கட்சிகள் அந்த வாக்கு வங்கியின் பலத்தினால் இவ்வாறான ஒற்றுமை முயற்சியினை கணக்கிலெடுக்காது தங்கள் நலனை முன்னிறுத்தி தங்கள் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு கிழக்குத் தமிழர்களை அரசியல் அனாதைகளாக ஆக்குவதற்கு அனுமதிக்க முடியாது என்பதை கடந்தகால அரசியல் அனுபவத்தினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆகவே கிழக்கு மக்களுக்காக எங்களால் முன்னெடுக்கப்படும் கட்சி நலன்சாராத இப் பணியினை விளங்கிக் கொண்டு குறித்த கட்சிகளை இதற்குள் ஒன்றிணையுமாறும் அவர்களுக்கு தலைமையேற்க விருப்பம் எனில் தலைமையேற்று இப்பணியினை முன்கொண்டு செல்லுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.