கோடீஸ்வரனை விசர்ப்பிடித்த நாயுடன் ஒப்பிட்ட கருணா!



நாங்கள் அம்பாறையில் சேவை செய்வதால் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விசர் பிடித்த நாய் போன்று கத்தி திரிகின்றார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.


வாகரை மாங்கேணி பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


முன்னாள் போராளிகள் மற்றும் குடும்பத் தலைவிகளை கவனிப்பதற்கே நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். அம்பாறையில் போராளி குழுவை கருணா உருவாக்குவதாக அம்பாறை நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.


ஏன் போராளிகள் குழு வரட்டும் நல்ல விடயம் தான். நாங்கள் அம்பாறையில் சேவை செய்வதால் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விசர் பிடித்த நாய் போன்று கத்தி திரிகின்றார்.


கத்தும் நாயிடம் பயன் இல்லை. இவர் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி விட்டுத் தான் கத்துகின்றார். இதனை பெரியவர்களிடம் கத்தினால் பரவாயில்லை. அம்பாறை பனங்காட்டு வைத்தியசாலை தரமுயர்த்தி எட்டு வருடம். இதனை நான் கூறி பெயர் பலகையை மாற்றி உள்ளேன்.


இரண்டு மூன்று வருடங்களில் வாகரையில் முற்று முழுதாக குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். கித்துள் உறுகாமம் குளம் இணைக்கப்படும் பட்சத்தில் திருகோணமலை வரைக்கும் நீர் வழங்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்கள் கட்டி வழங்கியது நான் தான். இன்னும் பல குளங்களை தேர்தல் வெற்றிக்கு பின் புனரமைப்பேன்.




மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, முக்கிய கட்சியாக உள்ளது. அதனை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு கதைத்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்து அவர்களினுடாக பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும்.


தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதுமையை படைத்து வருகின்றார். திடீர் என்று அரச அலுவலகங்களுக்கு செல்கின்றார். இதன் காரணமாக அரச அலுவலகங்கள் ஊழல் அற்ற அலுவலகமாக வரும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வியூகத்தினை அமைத்து வெற்றி பெற்று அரசினை பயன்படுத்துவோம். இது தொடர்பில் பிரதமருடன் கதைத்துள்ளேன்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் வாக்குகள் உள்ள தமிழ் மக்களுக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான், ஆனால் எண்பத்தெட்டாயிரம் வாக்குகள் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். இதில் பிழை விடுகின்றோம். நாம் அனைவரும் சேர்ந்து வாக்களித்தால் நான்கு நாடாளுமன்ற உறுப்பினரை பெற முடியும்.


தற்போது கிராமத்திற்கு இருபது இலட்சம் ஜனாதிபதியின் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை மேற்கொள்வது கிராம அபிவிருத்திச் சங்கம். ஆனால் தற்போது அரசியல் கட்சியினர் குழு அமைத்து எங்களினூடாக வந்துள்ளது என்று கூறுகின்றனர். அமைச்சராக இருந்து அமைச்சினூடாக வந்தால் மேற்கொள்ள முடியும். இது பொதுவான நிதி இதில் நாம் ஏமாறக் கூடாது என்றார்.


வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரசிக்காந்தன், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்


Powered by Blogger.