வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பொருளதாரா நெருக்கடிகளிலிருந்து மீண்டுவருவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதனைத் தொடர செய்வதையே சர்வதேச சக்திகளுக்கும் எதிர்பார்ப்பதாகவும், இதற்கு புதிய அரசாங்கம் ஒருபோதிலும் இடமளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“பல்வேறு இனத்தவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இனவாத சிந்தனையே தமிழ், சிங்கள மக்களிடையே உள்ள ஐக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தப் பிரிவுநிலையை தொடரச்செய்வதே அந்த சக்திகளின் எண்ணமாகும். அதனூடாக வெளிநாடுகளுக்கு எமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அமைப்பதே நோக்கமாகும்.
சில மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தி அதனூடாக இலாபத்தை பெறுவது யார் என்பதை அறிகின்றோம்.
இந்த நாட்டிலும் இனத்தவர்களிடையே ஐக்கியமின்மையை ஏற்படுத்துவதும் அப்படியான வெளிக்களச் சக்திகளாகும். தமிழ் சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை விடுத்து பிரிவினையை ஏற்படுத்துவதே இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த நிலையை புதிய தலைமுறைகள் புரிந்துகொண்டு வருகின்றனர். அந்த இனவாத அசியலையும் வடக்கிலுள்ள மக்கள் நிராகரித்து வருவதை நாளுக்குநாள் எம்மால் அறியமுடிகின்றது.
கடந்த அரசாங்கத்தினால் சம்பந்தன் இறுதிக்காலம் வரை வாழ்வதற்குத் தேவையான வசதியான இல்லம் வழங்கப்பட்டது. உதவிகளுக்கு அதிகாரிகளும் உள்ளனர்.
வாகனமும் கிடைத்து. என்ற போதிலும் தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவில்லை. அவர்களுடைய பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனினும் சம்பந்தனுக்கு மிகப்பெரிய வீடு கிடைத்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசாமல் தங்களது சுகபோகங்களையே பெற்றுக்கொண்டனர்.
தமிழ் மக்கள் தற்போதுள்ள பொருளாதாரத்திலிருந்து மீண்டுவருவதற்கு அவர்கள் விருப்பமில்லை. தொடர்ந்தும் தற்போதுள்ள நிலையிலேயே மக்கள் வாழ்வதையே குறித்த பிரதிநிதிகளும் எதிர்பார்க்கின்றனர்.
ஆகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்டெடுத்தால் இனவாத சக்திகளுக்கு தமிழ் மக்கள் ஆளாக மாட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.