சம்பிக்க ரணவக்க சம்பந்தமாக சட்டத்தை அமுல்படுத்திய விதத்தில் திறைசேரியின் பிணை முறி மோசடி தொடர்பாகவும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
சம்பிக்க அல்லது சாரதி இருவரில் யார் இந்த குற்றத்தை செய்திருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் தமது அரசாங்கத்தின் காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சீ.சீ.டிவி கெமராக்களில் பதிவான காட்சியை அழித்து, வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தார்களா என்பதை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
சட்டம் நீதியானது என்பது போல் சட்டத்தை நியாயமான முறையில் அமுல்படுத்தியதாக நாட்டுக்கு காட்ட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.
சம்பிக்க தொடர்பாக பொலிஸாரும், குற்றவியல் விசாரணை திணைக்களமும் செயற்பட்ட வேகத்திற்கு அமைய கட்டாயம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ரணில் விக்ரமசிங்கவும் இவ்வாறு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படலாம் என நாங்கள் நினைக்கின்றோம்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த இலங்கை மத்திய வங்கியில் நடந்த மிகப் பெரிய நிதி கொள்ளை தொடர்பாக தேவையான தகவல்கள் சட்ட அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்தும் வேகத்தை பார்த்தால் ரணில் விக்ரமசிங்கவும் நீண்டகாலம் செல்லும் முன்னர் விளக்கமறியலில் வைக்கப்படலாம் என நான் நினைக்கின்றேன் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.