இந்த ஆட்சியில் அரச அதிகாரிகள் அரசியல் ரிதியாக நசுக்கப்படவோ பழிவாங்கப்படவோ ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்…
மக்களுக்கான சேவை வினைத்திறன் மிக்கதாக அமைய வேண்டுமாக இருந்தால் அரச அதிகாரிகள் சுயாதீனமாக செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற வாழ்வாதார வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளும் தாங்கள் சார்ந்த பிரதேச மாவட்ட அரசியல் தலைமைகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தங்களுக்கு அரசியல் ரீதியாக துணை புரிகின்ற தமது அடிவருடிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் வாழ்வாதார வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் தங்களது அதரவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்று அரசியல் தலைமைகளால் அரச அதிகாரிகள் நிற்பந்திக்கப்பட்டதுடன் முறையான வினைத்திறன் மிக்க சேவையினை அரச அதிகாரிகள் செய்வதற்கு முட்டுக்கட்டையாக அரசியல்வாதிகள் இருந்தார்கள் எனவும் மக்கள் ஆதங்கங்களைத் தெரிவிக்கின்றனர்.
அது மாத்திரமல்லாமல் அரசியல் தலைமைகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அரச அதிகாரிகள் செயல்பட வேண்டுமென்கின்ற நிலையில் அரச அதிகாரிகள் சுயமாக செயல்பட முடியாத அளவிற்கு நசுக்கப்பட்ட சூழல் கடந்த காலத்தில் காணப்பட்டது, என்பதனை யாரும்மறுக்கமாட்டார்கள் இவ்வாறாக அரச அதிகாரிகள் நசுக்கப்படுகின்ற நிலை மாற்றமடைய வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு நாட்டில் அரசியல் ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர். அந்த அடிப்படையில் அரச அதிகாரிகள் மீது அரசியல் தலைவர்களின் எந்தவிதமான தலையிடும் அரசியல் பழிவாங்கலும் இடம் பெறக்கூடாது என்பது கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் எதிர்பார்ப்பாகும். கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தபோது அவருடன் இணைந்து செயற்பட்ட அதிகாரிகள் என்பதற்காக பல அதிகாரிகள் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்டார்கள்.
பதவி உயர்வுகளின்போது புறக்கணிக்கப்பட்டார்கள் தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்றது. அவ்வாறான சூழல் இடம்பெறாமல் அரச அதிகாரிகள் தங்களது செயற்பாடுகளை சுயமாக செயற்படுவதற்கும். கடந்த ஆட்சிக் காலத்தின்போது இடம்பெற்றது போன்று ஏனைய கட்சிகளுக்கும் ஏனைய அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற சூழலை மனதில் வைத்துக்கொண்டு ஒருபோதும் திறமையான,நேர்மையாக கடமைகளைச் செய்பவர்கள் மீது அரசியல் ரீதியான பழிவாங்கலை யார் மேற்கொள்ள முனைந்தாலும் அதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை.
கிழக்கு மாகாணம் அதிகார வர்க்கத்திடம் இருந்து விடுபட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுதியாக இருந்து வருகின்றது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால் அதில் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவை அளப்பரியதாக அமைகின்றது. அரச அதிகாரிகள் மக்களுக்கான சேவைகளை வழங்க முன் வருகின்ற போது அதற்கு தடையாக அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது. அரசியல் ரீதியாக பழி வாங்கல் இடம்பெறக்கூடாது.
பக்கச்சார்பற்ற முறையில் நேர்மையான சேவை வழங்கப்பட வேண்டும் என்பதில் மிக ஆணித்தரமாக இருக்கின்ற நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் இந்த விடயத்தில் எவ்வாறு தெளிவாக இருக்கிறதோ அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் அரச நிர்வாகிகள் மீது பழி தீர்க்க இடம் கொடுக்கப்படக்கூடாது என்பதுடன் அரச நிர்வாகிகளும் மக்களுக்கான சேவைகளை வழங்காமல் தட்டிக் கழிக்காமல் அர்ப்பணிப்படன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்