பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் மாஸ்டரின் கொலையும் பின்னணியில் செயற்பட்ட தமிழரசுக் கட்சியும்





நிமலன் மாஸ்டர் கொலை செய்யப்பட்டு 19 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரின் கொலை தொடர்பில் எந்த விசாரணையும் இல்லை. அவரது நினைவு தினத்தினைக்கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பினரோ, தமிழரசுக் கட்சியோ இவரின் நினைவுதினத்தினைக் அனுஸ்டிப்பதில்லை. இருந்தும் 2017 மட்டும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டைக்காக மட்டும் அனுஸ்டித்தனர். நிகழ்வுக்கு வந்த சுமந்திரனை மக்கள் திருப்பி அனுப்பினர்.










தன் கட்சி சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு தமிழரசுக்கட்சி அஞ்சலி செலுத்தாதது ஏன்? இவரின் கொலையின் பெரும்பங்கு தமிழரசுக் கட்சியினுடையது என்பது வெளிப்படை. 













2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடந்த பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் கட்சியை சேர்ந்தவர்களாக இரு உறுப்பினர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர்.






திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து எவரும் தெரிவு செய்யப்படவில்லை. 5 உறுப்பினர்களை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.





நிமலன் சௌந்தரநாயகம் 15687 விருப்பு வாக்குகளையும் ஜோசப் பரராசசிங்கம் 12,867 விருப்பு வாக்குகளையும் பெற்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.


800 வாக்குகளை தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் பெற்றிருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு ஆசனம் தான் கிடைத்திருக்கும்.


கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை சிங்கள முஸ்லீம் இனங்களுக்கு பறிகொடுத்திருந்த வேளையில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான நிமலன் சௌந்தரநாயகம் பொதுத்தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் முடிவடைவதற்கு முதல் 07.11.2000 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.





இலங்கையின் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து பதவியை ஏற்குமுன் சுட்டுக்கொல்லப்பட்டவர் நிமலன் சௌந்தரநாயகம் தான்.





நிமலன் சௌந்தநாயகம் தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினராக மட்டக்களப்பில் காசி ஆனந்தன், வேணுதாஸ், ஆகியோருடன் இணைந்து செயல்பட்டவர். நிமலன் சௌந்தநாயகம் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். மூன்று மொழிகளிலும் நன்கு பரிச்சயம் கொண்டவர். தமிழ் பற்றும் துணிச்சலும் கொண்ட ஒருவரை மட்டக்களப்பு மக்கள் 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமது பிரதிநிதியாக தெரிவு செய்த போதிலும் ஒரு மாதகாலத்திற்குள் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.





அவரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றனர். நிமலன் சௌந்தநாயகம் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கொழும்பு சென்று சத்தியபிரமாணம் செய்வதற்கு முதல் விடுதலைப்புலிகள் சந்திக்க வருமாறு அவரை அழைத்திருந்தனர். சம்பவதினம் காலையில் தனது உதவியாளருடன் நிமலன் சௌந்தநாயகம் கரடியனாற்றுக்கு சென்று அப்போது அரசியல் பொறுப்பாளராக இருந்த விசுவை சந்தித்தார். அன்று மதியம் விசு உட்பட முக்கிய தளபதிகளுடன் உணவையும் உண்டார்.





மதிய உணவின் பின்னர் புறப்படும் போது நிமலன் சௌந்தரநாயகத்திற்கு புதிய ஹெல்மெட் ஒன்றையும் விசு அன்பளிப்பாக வழங்கினார். மோட்டார் சைக்கிளில் செங்கலடி கறுப்பு பாலத்தை கடந்து செங்கலடி நகருக்கு வந்த நிமலன் சௌந்தரநாயகம் செங்கலடி சந்தியில் தனது நண்பர்கள் சிலரை சந்தித்து பேசும் போது கரடியனாற்றிற்கு சென்று விடுதலைப்புலிகளை சந்தித்துவிட்டு வருவதாகவும் விசு தனக்கு புதிய ஹெல்மெட் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார் என்றும் மகிழ்ச்சியோடு கூறினார். 





அதன் பின்னர் செங்கலடியிலிருந்து வாழைச்சேனைக்கு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது மாலை 6மணியளவில் கிரானில் வைத்து நிமலன் சௌந்தரநாயகம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் வருகைக்காக காத்திருந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கைத்துப்பாக்கியால் அவரை சுட்டு விட்டு தப்பி சென்றார். இச்சம்பவம் கிரான் கூட்டுறவு சங்க கடைக்கு எதிரிலேயே நடைபெற்றது. பொதுமக்கள் பலர் அக்கடையில் நின்றுள்ளனர்;.





கிரானில் உள்ள மக்களுக்கு மிகவும் பரிச்சயமான விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரே நிமலன் சௌந்தரநாயகத்தை சுட்டுக்கொன்றார் என்பது அப்பகுதி மக்களுக்கு தெரியும். விடுதலைப்புலிகளின் பிஸ்ரர் குழுவை சேர்ந்த ஒருவராலேயே நிமலன் சுட்டுக்கொல்லப்பட்டார். பெடியள் நிமலன் சௌந்தரநாயகத்தை சுட்டுவிட்டார்கள் என அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.


நிமலன் சௌந்தரநாயகத்தை கரடியனாற்றிற்கு அழைத்த விடுதலைப்புலிகள் நாடாளுமன்றத்திற்கு சத்திய பிரமாணம் செய்ய செல்லும் போது உதவியாளராக அல்லது சாரதியாக தங்களின் தற்கொலை போராளி ஒருவரை அழைத்து செல்ல வேண்டும் என கோரியதாகவும், அதற்கு நிமலன் சௌந்தரநாயகம் மறுத்ததாலேயே அவர் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.





நிமலன் சௌந்தரநாயகத்தின் படுகொலையை கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது ஒரு முட்டாள்தனமான கொலை என்றும் அமைதியான அரசியல் தீர்வை நாடி செல்லும் ஜனநாயக ரீதியான அரசியல் தலைவரை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை படுகொலை செய்யும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது





கிழக்கில் தெரிவு செய்யப்பட்டது இரு உறுப்பினர்கள் தான். அதிலும் ஒருவரை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்று விட்டனர். ஆளுமை மிக்க இளம் அரசியல் தலைவர் ஒருவரை மட்டக்களப்பு மக்கள் இழந்தனர். இப்படுகொலை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்திருந்தது. நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் அஞ்சலி நிகழ்விலும் இறுதிச்சடங்கிலும்





பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் ஆனந்தசங்கரி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசிங்கம் உட்பட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இன்று நிமலன் சௌந்தரநாயகம் உயிருடன் இருந்திருந்தால் கிழக்கு மாகாணத்தில் சிறந்த தமிழ் அரசியல் தலைவராக திகழ்ந்திருப்பார்.





Powered by Blogger.