பிரபல திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய கடல் குதிரை படத்தில் கதாநாயகியாக நடித்த இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் "எனது கடல் குதிரை படத்தில் இலங்கையை சேர்ந்த பிரசாந்தி என்பவர் கதாநாயகியாக நடித்தார். அவரையும், அவரது தாயாரையும் கியூ பிரிவு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அதன்பிறகு இருவரையும் காணவில்லை. அவர்களை கியூ பிரிவு பொலிஸார் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கருகிறேன். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்
"பிரசாந்தி போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றவாளியாக உள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் இங்கு இல்லை என்பதும், இலங்கைக்கு சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது.
அவர் முறைப்படி இலங்கை சென்றாரா. அல்லது கள்ளத்தோணியில் தப்பிச் சென்றாரா என்பது குறித்து பொலிஸ் விசாரித்து வருகிறது" என்று கூறினார்.
இதனை ஏற்ற நீதிமன்றம் புகழேந்தி தங்கராஜ் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் படும் துன்பங்களை மையமாக வைத்து கடல் குதிரை படம் உருவாகி இருந்தது. தலைவாசல் விஜய், ரோகினி உள்பட பலர் இதில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இலங்கையைச் சேர்ந்த பிரசாந்தி என்பவர் ஹீரோயினாக நடித்தார்.