ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் தற்போது கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ள இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி அக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர் என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கடிதத்தில் கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அங்கத்தவர்களான முன்னாள் தவிசாளர் கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 45 பேர் கையொப்பம் இட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பு மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒரே கட்சிக்குள் இரு பிரிவுகளாக நின்று முரண்பட்டுக் கொள்வதால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.