தமிழ் அரசுக் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவால் கூட்டமைப்புக்குள் பூகம்பம். பங்காளி கட்சிகள் வெளியேற்றம்
வழக்கம் போல எந்த நிபந்தனையுமில்லாமல் ஐதேகவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக்கட்சி அவசரகதியில் எடுத்த முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் முறுகலை ஏற்படுத்தியிருக்கிறது
பங்காளிக்கட்சிகளிற்குள் கலந்துரையாடாமல் அவசரகதியில் எடுத்த முடிவின் பின்னணி குறித்தும் அந்த கட்சிகளிற்குள் சந்தேகம் எழுந்துள்ளதை அறிய முடிந்தது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க பல முயற்சிகள் நடந்து வரும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் போலவே அந்த முயற்சிகளை குழப்பி திடுதிப்பென தனித்து முடிவெடுத்ததன் பின்னணி குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதை அறிய முடிந்தது. ரெலோ, புளொட் கட்சிகளின் பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டதுடன், அடுத்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடுமையான அதிருப்தியை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன், ஐ.தே.கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில்லையென்றும் ரெலோ தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐந்து தமிழ் கட்சிகள் கூடி, பிரதான வேட்பாளர்களை சந்திப்பதென தீர்மானித்திருந்தன. ஆனால் பிரதான வேட்பாளர்கள் சந்திக்கவில்லை. இதேவேளை, கூட்டமைப்பின் தலைவர்களும் பிரதான வேட்பாளர்களை சந்திக்கவில்லை . தமிழ் அரசு கட்சி மாத்திரமே இரண்டு தரப்புடனும் இரகசிய பேச்சில் ஈடுபட்டிருந்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சுவிஸ், சிங்கப்பூரில் நடந்த இரகசிய பேச்சுக்களில் எம்.ஏ.சுமந்திரன் தனித்து பங்குபற்றினார். ஐந்து வருடங்களின் பின்னர், தமிழ் அரசியலை பெரும் இக்கட்டுக்குள் தள்ளிவிட்டு, அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டதென சாதாரணமாக குறிப்பிட்டு விட்டு, மீண்டும் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
கடந்தமுறை ஐதேகவை ஆதரித்தமைக்காகஇ பின்னர் வரவு செலவு திட்டம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை சமயங்களில் தமிழ் அரசுக்கட்சியின் மூன்று பிரமுகர்களிற்கு "பெரும் அனுகூலங்கள்" வழங்கப்பட்டதாக, அண்மையில் தூதரக அதிகாரியொருவர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் சிலரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அதிருப்தியடைந்திருந்ததையும்இ ஏற்கனவே தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
இம்முறையும்இ இரகசியமாக திடீர் அறிவித்தலை தமிழ் அரசுக்கட்சி விடுத்தது பல மட்டங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கடந்தவாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கூட்டம் நடந்ததுஇ அதற்கு சில நாட்களின் முன்னர் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர், இந்த சமயங்களிலெல்லாம் இப்படியொரு முடிவை எடுப்பதென தமிழ் அரசு கட்சி பேசியிருக்கவில்லை. புளொட் அமைப்பு ஏற்கனவே மத்தியகுழு கூட்டத்தை நடத்தி சஜித்தை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்தது. எனினும், பங்காளிக்கட்சிகள் கூட்டாக அறிவித்தல் விட வேண்டுமென்பதற்காக அது பற்றி பகிரங்கப்படுத்தாமல் இருந்தது. ரெலோ, சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவை வழங்குவதற்கு வேட்பாளர்களை சந்திப்பதென திட்டமிட்டிருந்தது. அதற்காக வேட்பாளர்களிடம் நேரம் கோரியிருந்தது. இந்த நிலையில், கூட்டணிப் பொறுப்புணர்வை மீறி, தன்னிச்சையாக தமிழ் அரசுக்கட்சி முடிவெடுத்தது, பங்காளிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் மாலை- தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள் அனைத்திற்கும் நெருக்கமான கொழும்பு சமய பிரமுகர் ஒருவருடன் பேசிய சம்பந்தன்இ "நாளை (நேற்று) சஜித்திற்கான ஆதரவை அறிவிக்கவுள்ளோம்" என தெரிவித்திருந்தார். பங்காளிகளுடன் பேசவில்லையா என அவர் திருப்பிக்கேட்க, "அப்படி பேச வேண்டிய அவசியமில்லை . நாம்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு" என எகத்தாளமாக சம்பந்தன் பதிலளித்திருந்தார். இந்த தகவல் அன்றே இரண்டு கட்சிகளிற்கும் தெரிய வந்திருந்தது.
நாளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு தமிழ் அரசுக்கட்சி அழைப்பு விடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும் பூகம்பம் வெடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.