ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் வெள்ளை வானை பயன்படுத்தி மக்களை கடத்திச் சென்று கொலை செய்து முதலைகளுக்கு சாப்பிட போட்டதாக தகவல் வெளியிட்ட வெள்ளை வான் சாரதியை பிடிக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த நபர் மேற்படி தகவல்களை வெளியிட்டிருந்தார்.
ராஜித சேனாரத்ன அழைத்து வந்திருந்த மற்றுமொரு நபர், வடக்கில் பிரபாகரனிடம் திருடப்பட்ட 7 தொன் தங்கம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவை கோட்டாபய ராஜபக்சவுக்காக கொள்ளையிடப்பட்டவை என கூறியிருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களை வெளியிட்ட நபர்களை பிடிக்க முடியாது போனால், இது சம்பந்தமான பொறுப்பு மற்றும் தகவல்களை அறிந்த நபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை உடனடியாக அழைத்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக சில அமைப்புகள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.