வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அத்தோடு இழந்து போன தமது சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத வகையில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்த ரிஷாட் பதியுதீன் அவர்களுக்காக இன்றைய நாளில் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வடக்கிலே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றன என்றும் தற்போதும் அந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற போதும் இன்னும் முழுமையாக பூரணப்படுத்தப்படவில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.