விடுதலைப்புலிகள் அமைப்பு மீள் உருவாக ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விடுதலைப்புலிகள் அமைப்பு மீள் உருவாக ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் அண்மையில் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் பிரதானி அயோப் கான் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த நபர்கள் இன்றும் எதிர்வரும் வியாழக்கிழமையும் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 2 சந்தேக நபர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.