சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திடீர் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
என்ன நோக்கத்திற்காக சிங்கப்பூர் செல்கிறார் என்பது பகிரங்கமாக கூறப்படாதபோதும் ரணிலின் இந்த விஜயம் தற்போதைய நிலையில் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
குறிப்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்யும்வரை அமைச்சரவைக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்று இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்யப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் விடாப்பிடியாக கூறிவரும் நிலையில் அது தொடர்பாக ரத்துச் செய்யும் நிலைப்பாட்டை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரியவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தரப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் உள்ளே புகைந்துகொண்டிருக்கும் பனிப்போர் கடும் முறுகலாக வெடிக்கும் நிலையில் பிரதமரின் இந்த திடீர் வெளிநாட்டுப் பயணம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே வரும் வாரங்களில் இலங்கை அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.