முஸ்லீம்களை கற்களால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று சிங்கள பௌத்த மக்களுக்கு உபதேசம் செய்த அஸ்கிரிய பீட மகாநாயக்கருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட சிறி ஞானரத்ன தேரர் உட்பட சிலர் மேற்கொண்டுவரும் முஸ்லீம்களுக்கு விரோதமான இனவாத கருத்துக்கள் காரணமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன மோதல்கள் வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் எச்சரிக்கையையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விடுத்திருக்கின்றனர்.
சித்திரவதைகளுக்கு எதிராக பொது அமைப்புக்களின் ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளர்களான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகியோர் இந்த தகவல்களை தெரியப்படுத்தினர்.
கண்டி, யட்டிநுவர தியகெலினாவ கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் யூன் 16 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் வரக்காகொட சிறி ஞானரத்தன தேரர், சிங்கள பௌத்தர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் உபதேசம் வழங்கியிருந்தார்
அதேவேளை சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்ததாக சிங்கள ஊடகங்களினால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முஸ்லீம் மருத்துவரான சாஃபியை கற்களால் எறிந்து படுகொலை செய்ய வேண்டும் என்றும் அஸ்கிரிய மகாநாயக்கர் குறிப்பிட்டிருந்தார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரின் இந்த உரைக்கு கொழும்பிலுள்ள சிவில் அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்களை முன்வைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ICCPR என்ற மத மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான சர்வதேச நியதிச் சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
முஸ்லீம்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் பேசியிருக்கின்றார். இதனையே அடிப்படை மதவாத இஸ்லாமியர்களும் வலியுறுத்துகின்றனர். மகாநாயக்கர் அரசியல்வாதிகள் தமது சுய லாபங்களுக்காக மேற்கொள்ளும் பொய்யான பரப்புரைகளை நம்பி இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை முன்வைக்கின்றார். இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக செயற்பட எமது நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக இதற்காகவே சட்டமொன்று இருக்கின்றது என கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
இதேவேளை சிறிலங்காவில் முஸ்லீம்களுக்கு எதிராக இனவாதம் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கும் மற்றுமொரு சிவில் செயற்பாட்டாளரான தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா, இவ்வாறான நிலையில் நாட்டில் ICCPR சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த சட்டம் இனங்களுக்கிடையில் குரோதத்தையும், பொய்ப் பிரசாரங்களையும் மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தாது, சிறுகதைகளை எழுதிய ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஜெஹான் பெரேரா குற்றம்சாட்டுகின்றார்.
மேலும் எமது சிங்கள சமூகத்தில் நாம் இன்று முஸ்லீம்களின் கடைகளுக்கு போக வேண்டாம் என்று பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றோம். முஸ்லீம்கள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதற்கான மாத்திரைகளை உணவுகளிலும், பாணங்களிலும் போடுவதாக குற்றம்சாட்டி வருகின்றோம்.
இந்த தாக்கம் தற்போது எமது நாட்டில் வாழும் ஏனைய சமூங்களுக்கும் சென்றிருக்கின்றது. உதாரணமாக மட்டக்களப்பில் அருகருகே தமிழ் முஸ்லீம் கிராமங்கள் இருக்கின்றன.
இந்த பிரசாரங்கள் காரணமாக தமிழ் மக்கள் முஸ்லீம் கிராமங்களுக்கு செல்வதில்லை. அதேபோல் முஸ்லீம் மக்கள் தமிழ் கிராமங்களுக்கு செல்வதில்லை. இதனால் அந்த கிராமங்களிடையே மோசமான பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மன்னாரில் கத்தோலிக்கர்களுக்கும் – இந்துக்களுக்கும் இடையில் மத ரீதியான மோதல்களும் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் நாம் விரைவில் தேர்தலொன்றுக்கு முகம்கொடுக்க இருக்கின்றோம். இதனால் தற்போதுள்ள நிலமைகள் மேலும் மோசமடையும். ஏனெனில் அரசியல்வாதிகள் இந்த பிரச்சனைகளை தமது குறுகிய அரசியலுக்கு பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற்றுக்கொள்ள முயல்வார்கள். இந்த நிகழ்வுகளால் நாடு பாரிய அழிவை சந்திக்கும் என ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.