வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட குறித்த சோதனை நடவடிக்கையின் போது, ஹயஸ் ரக வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றி வளைத்து தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஹயஸ் ரக வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், அரபாநகர் பகுதியில் சுற்றி திரிந்த நபரொருவரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை.
அதன் பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது அவரது வீட்டிலிருந்து இராணுவ சீருடையுடன் ஒத்த தொப்பி மற்றும் ஆடை என்பவற்றினை கைப்பற்றியதுடன் குறித்த நபரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் மன்னார் பகுதியில் இருந்து பூவரசன்குளத்தில் வந்து நின்ற ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பூவரசன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இராசேந்திரங்குளம் பகுதியில் சந்தேகத்திடமான முறையில் திரிந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரின் ஆள் அடையாள அட்டை பதிவு நீர்கொழும்பு என காணப்பட்டதுடன் பொலிஸாரின் விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தமையினால் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்த குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.