இலங்கையின் அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றது. உலகமே இலங்கையின் அரசியலை உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்றது.
யார் பிரதமர், பெரும்பாண்மையை யார் நிருபிப்பது எனும் போட்டியில் பல பேரம் பேசல்கள் சலுகைகள், அமைச்சுப் பதிகள் என்று வழங்கப்படுகின்றது.
காலையில் ஒரு கட்சியிலும் மாலையில் ஒரு கட்சியிலும் தாவும் நிலையில் இலங்கையின் அரசியல் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் மஹிந்த தரப்புக்கு ஆதரவு வழங்குதாக அறிவித்து மஹிந்த பக்கம் தாவியிருந்ததுடன் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமானத்தினையும் பெற்றிருந்தார்.
இவர் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்ததனையும் அமைச்சு பதவியினை பெற்றதனையும் மிக மோசமாக பலர் விமர்சித்து வருகின்றனர். பல கோடி பணத்துக்கு விலை போய்விட்டான் துரோகி என்று இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் வசைபாடி வீரம் பேசிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணத்தான் துரோகி பட்டம் வாங்குவது இது ஒன்றும் புதிதல்ல.
மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ச அவர்களிடமிருந்தும் மைத்திரிபால சிறிசேன அவர்களிடமிருந்தும் தமக்கு ஆதரவு வழங்கும்படி கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
மஹிந்தவை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்கள் மஹிந்த தரப்பினர் எழுத்து மூலம் சில விடயங்களை தரவேண்டும் என்று கூறுகின்றார். மஹிந்த , சம்மந்தன் சந்திப்புக்கு முன்னரே கூட்டமைப்பு ரணிலுக்கே ஆதரவு என்பது அவர்களின் நடவடிக்கையிலிருந்து புலப்பட்டது. எழுத்து மூல ஒப்பந்த பேச்சு எல்லாம் வெறும் பூச்சாண்டியே.
அதன் பின்னர் தாம் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாகவும் ஆதரவு வழங்குவதற்கு காரணமாக சில நொண்டிச் சாட்டுக்களையும் முன்வைக்கின்றனர் கூட்டமைப்பினர்.
மஹிந்தவிடம் சில விடயங்களை எழுத்துமூலம் கேட்டவர்கள் அதில் ஒரு விடயத்தையாவது ஏன் ரணிலிடம் கேட்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதில் பெரும் பங்கு தமிழ் தேசியக் கூட்டமப்புக்கு உண்டு. நல்லாட்சி அமைந்து தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ரணில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
அரசியல் கைதிகள் தொடர்பில் ரணிலின் நல்லாட்சி அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
ரணிலின் நல்லாட்சி அரசாங்கம் வடக்கு கிழக்கில் எதைச் செய்திருக்கின்றது?
இந்த நல்லாட்சியில் கிழக்கில் தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்படும்பொழுது இந்த அரசாங்கம் என்ன செய்தது?
நல்லாட்சியை அமைத்த தமிழ் மக்களுக்கு ரணில் செய்த கைமாறு என்ன?
ஒட்டு மொத்தத்தில் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களுக்கு என்ன செய்திருக்கின்றது.
எதுவுமே செய்யாத ரணிலுக்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு முன் வந்தமைக்கான காரணம் என்ன?
உண்மையில் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ரணிலுமே காரணம். உலகமே பார்த்து வியந்த விடுதலைப் புலிகளை இரண்டாக உடைத்து புலிகளை இல்லாமல் செய்த பெருமை ரணிலையே சாரும். புலிகளையே உடைத்த ரணிலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பது பெரிய விடயமல்ல. ரணிலின் வலையில் சிக்கிய கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியே.
மறு புறத்தில் மஹிந்த ராஜக்ச அவர்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்கு பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மஹிந்தவிற்கு பாடம் புகட்டியுள்ளனர். தமிழ் மக்களின் அவசியத்தை மஹிந்த உணர்ந்துள்ளார் தமிழ் மக்களை பகைக்கக்கூடாது தீர்வினை வழங்கவேண்டும் என்பதை உணர்ந்துள்ளார்.
இந்த அரசியல் நெருக்கடி நிலையில் தமிழர்களினதும், கூட்டமப்பினதும் ஆதரவினையும் அவசியத்தினையும் மஹிந்த உணர்ந்துள்ள நிலையில் கூட்டமைப்பானது பேரம் பேசல்களுடன் மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கியிருக்கவேண்டும்.
இதுவரை காலமும் தமிழர் உரிமை, தமிழர் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் சிறிதும் கரிசனை கொள்ளாத ரணிலைவிட தமிழர்களின் தேவையை உணர்ந்து வருபவர்களுடன் பேரம் பேசியிருக்கவேண்டும்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு உரிமை வழங்கப் போவதில்லை. ஆனால் ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி அரசாங்கத்துடன் இணைந்து படிப்படியாக உரிமைகளை பெற்றுக்கொள்வதுடன் யுத்தத்தால் அழிவடைந்த வடக்கு, கிழக்கினையும் அபிவிருத்தி செய்ய முடியும்.
இந்த நிலையில் வியாளேந்திரன் அவர்கள் மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கி அமைச்சுப்பதவி பெற்றதனை துரோகி என்று பலர் விமர்சித்தாலும் கிழக்கு மாகாணத்த நேசிக்கின்ற பலர் வரவேற்கின்றனர்.
யுத்தத்தால் பாரிய அழிவுகளை சந்தித்த கிழக்கு மாகாணத்தை சர்வதேசம் உட்பட யாருமே திரும்பிப் பார்ப்பதில்லை. வெளிநாட்டு இராஜ தந்திரிகளாகட்டும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களாகட்டும் ஈழம் என்றால் வடக்குத்தான் என்கின்ற ஒரு மனநிலை உண்டு. வடக்கிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் கிழக்கை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
கிழக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மக்களில் அக்கறை கொள்வதில்லை, மக்களின் பிரச்சினை தொடர்பில் அக்கறை எடுப்பதில்லை. மாகாணசபையை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து முஸ்லிம்களால் கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அத்தனை அராஜகங்களுக்கும் துணை போனார்கள்.
தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன. வேலை வாயப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு, நிதி ஒதுக்கீடுகளில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு, உயர் பதவிகளில் முஸ்லிம்கள் மாற்றப்பட்டார்கள், இவ்வாறு பல விடயங்கள் கிழக்கு மாகாணசபை ஆட்சியில் நடந்தன கூட்டமைப்பினர் மௌனிகளாக வலம் வந்தனர்.
கிகழ்கு தமிழர்களை காப்பாற்றவேண்டியவர்கள் மௌனிகளாக வேடிக்கை பார்க்கும்பொழுது கிழக்கை மீட்க, கிழக்கு மக்களை காப்பாற்ற கிழக்கை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் காலத்திற்கேற்ற முடிவுகளை எடுக்கவேண்டும்.
இன்றைய நிலையில் நில அபகரிப்பை தடுத்து தமிழரின் இருப்பை காப்பாற்றி நலிவடைந்த கிழக்கை கட்டியெழுப்பவேண்டும். அதற்கு சரியான தெரிவு ரணிலைவிட மஹிந்தவே.
இன்று வியாளேந்திரனை துரோகி என்று வசைபாடுபவர்கள் கூட்டமைப்பினரும் அவர்களின் ஆதரவாளர்களுமே. கிழக்கை நேசிக்கும் கிழக்கு தமிழன் சந்தோசத்தில் இருக்கின்றான்.
காட்டுவாசி