பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,
"கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.
1. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19 ம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது.
ஆகையால் பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.
2. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக ஜனாதிபதி, விடுத்த பிரகடனத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக விரோத செயலாகவும் பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மையை பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதம மந்திரியாக அறிவித்துவிட்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைஅவர் நிரூபிக்க வேண்டிய தேவையை தாமதிப்பதற்கும் முறியடிப்பதற்கும் எதுவாக செய்யப்பட்ட காலநீடிப்பே இதுவாகும்.
இக்கால நீடிப்பை உபயோகித்து மந்திரிப்பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு முறைகேடாக இழுத்தெடுத்து பாராளுமன்ற பெரும்பான்மையை கபடமாக பெற்றுக்கொள்வதற்கான இந்த ஜனநாயக விரோத செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு தனது எதிர்ப்பையும் தெரிவித்துகொள்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்த சதிமுயற்சிக்கு பலியானதை குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
3. மேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் ´நடுநிலை´ வகிப்பதென்பது அராஜகம். வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக் கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு."
நன்றி adaderana