ரணிலால் கூட்டமைப்புக்குள் வலுவடையும் முரண்பாடு




முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





இதன்படி, ரணிலுக்கு ஆதரவாக சத்தியக் கடதாசி வழங்கும் விடயத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 26ஆம் திகதி ரணிலை பிரதமர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியிருந்தார். அத்துடன், மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமித்தார்.

இந்த விடயம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து நாட்டில் சில அதிரடியான அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் சர்வதேச நாடுகள் கடும் அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்தன.

இந்நிலையில், நாடாளுமன்றை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆடசியமைக்கும் அதிகாரத்தை வழங்குமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மகிந்த - ரணில் தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் பின்னணியில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரித்தது.

எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மாத்திரமே கூட்டமைப்பு ஆதரவு வழங்கியுள்ளதாவும், ரணிலை ஆதரிப்பது தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக “தமிழரசுக் கட்சி ரணிலை ஆதரிக்க துணை போனால் அது வரலாற்றுத் தவறாகி விடும்” என்ற நிலைப்பாட்டில் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவான சத்திய கடதாசியில் கையொப்பம் இட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Powered by Blogger.