மட்டக்களப்பு வைத்திய நலன்புரி சங்கம் என்ற பெயரில் இடம்பெறும் பொய் பிரச்சாரங்கள் - வெளிவரும் உண்மைகள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சர்ச்சைகள் இடம்பெற்றுவருவதுடன் பல உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்படுகின்ற நிலைகாணப்படுவதாகவும் சமூகப் போராளிகள் சுட்டிக்காட்டி வரும் நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளை இலக்குவைத்து, சமூக ஊடகங்களில் போலியான பெயர்களில் தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளை கைது செய்வதற்கு போலிஸார் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக வைத்திய நலன்புரிச் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இவர்களின் அறிக்கைக்கு பதில் வழங்கியிருக்கின்றார் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்
கடந்த காலத்தில் இலங்கையில் மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்ட அலோசியசுக்கு ஆதரவாக , கல்குடாவில் மெண்டிஸ் நிறுவனம் மதுபான வடிசாலை அமைப்பதற்காக, மனித குல மேம்பாட்டுக்காக உலக சுகாதார ஸ்தாபனமும் ஏனைய மருத்துவ அமைப்புகளும் மதுபான பாவனைக்கும் உற்பத்திக்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து மட்டு மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம் என்ற பெயரில் மதுபான வடிசாலை அமைத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பும் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படும் என்று பல பொய் கருத்துக்களை கடந்தகாலத்தில் திட்டமிட்டு பரப்பி வந்தவர் டாக்டர் எஸ். மதனழகன் (1). ஆரம்பத்தில் பிரச்சாரத்துக்காக உள்ளூர் மக்களை வேலையில் அமர்த்திய மெண்டிஸ் நிறுவனம் அவர்களை முற்றாக நிறுத்தி இந்தியர்களையும் தென்பகுதி வேலையாட்களையும் உள்வாங்கியபோது இவரின் சாயம் முற்றாக வெளுத்துப் போனது.
இவர் தற்போது மட்டக்களப்பு வைத்திய நலன்புரி சங்க தலைவர் என்ற பெயரில் சமூக ஊடகப் போலிகளின் தாக்குதலால், மூன்றுக்கும் குறையாத மருத்துவ நிபுணர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறிவிட்டதாக ஊடகங்களுக்கு பொய் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் (2). அண்மையில் வெளியேறிய 3 மருத்துவ நிபுணர்களும் அரசாங்க சேவையில் ஒரு வைத்தியசாலையில் அதிக பட்சம் சேவை செய்யக்கூடிய 4 வருடங்களை பூர்த்தி செய்தபின்னர் தமது சுய விருப்பத்துக்கு ஏற்றவகையில் வைத்தியசாலைகளை தெரிவு செய்து சென்று இருப்பதுடன் இவர்களுடைய இடத்துக்கு புதிய வைத்திய நிபுணர்கள் மட்டக்களப்புக்கு சேவையாற்ற வந்த பின்னரே இவர்கள் மட்டக்களப்பில் இருந்து செல்ல அனுமதிக்கப் பட்டார்கள் என்பதே உண்மை ஆகும். இந்த நிலையில் கடமை நேரத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வைத்தியசாலைகளில் மட்டக்களப்பு வைத்தியர்கள் சட்டவிரோதமாக கடமையாற்றுவது மற்றும் கிழமையில் 7 நாட்களில் மட்டக்களப்பில் வந்து 2 நாட்கள் வேலை செய்து ஏனைய 5 நாட்களும் வெளி மாவட்டங்களில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களின் விபரங்கள் சமூக ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் ஆதாரங்களுடன் வெளிவந்து இருப்பதை தாங்க முடியாத வைத்தியர் மதனழகன் சட்டவிரோத செயற்பாட்டாளர்களை காப்பதற்காக இத்தகைய பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
உண்மையில் மட்டக்களப்பு வைத்திய நலன்புரி சங்கம் தனது முக்கிய பொறுப்பாக கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றுவதை நிறுத்தி ஏனைய மாவட்டத்தில் இருந்து வரும் வைத்தியர்களுக்கும் ஏனைய இன மருத்துவர்களுக்கும் முன்னுதாரணமாக செயல் பட்டிருக்க வேண்டும் . மேலும் மட்டக்களப்பு வைத்தியசாலையை நம்பி சிகிச்சைக்கு வந்து தாலியை இழந்த தமிழ் பெண்ணுக்கு யார் களவு எடுத்தார்கள் என்பதற்கு அப்பால் வைத்தியசாலை நிர்வாகமும் வைத்திய நலன்புரி சங்கமும் பொறுப்புக் கூறி இருக்கவேண்டும். அதாவது வைத்தியசாலையின் உள்ளே வேடதாரி புகுந்து நோயாளியிடம் களவு எடுக்கும் நிலை காணப்பட்ட தவறை ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும். அதை விடுத்து கடமை நேரத்தில் அரசாங்க வைத்தியசாலை நோயாளிகளை கவனிக்காது கள்ளர்கள் வைத்தியர்கள் போல் நடித்து களவெடுக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டு தனியார் வைத்தியசாலைகளில் சட்டவிரோதமாக ஊழலில் ஈடுபட்டால் அது தொடர்பாக செய்திகள் வெளிவருவது தவிர்க்க முடியாது என்பதை மட்டக்களப்பு வைத்திய நலன்புரி சங்கம் புரிந்து கொள்ளுமா ?
இந்த செய்தியை மீள்பிரசுரம் செய்வதற்கும் பகிர்ந்து கொள்ளவும் ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து ஊடகங்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் இத்தால் அனுமதி அளிக்கிறேன்.
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய வைத்திய நிபுணர்